நிஸ்வா யோகம்! ஸ்வா எனும் வடமொழிச்சொல்லிற்கு செல்வம் என்று பொருள்.நி என்னும் சொல் உடன் சேரும்போது மறுக்கப்பெற்ற செல்வம் என்று பொருள்படும்! (Sva means Wealth and Nisva means one devoid of wealth) லட்சணம் என்பது ‘அவ’ எனும் சொல்லைச் சேர்க்கும்போது மாறுபடுவதைப் போல அது என்று வைத்துக் கொள்ளுங்கள் செல்வம் எப்படி மறுக்கப்படும்? மூன்று விதமான நிலைப்பாடுகள் உள்ளன.
1. வராமல் போகலாம்.
2. வருவதைவிட நமது தேவை அதிகமாகப்போய் பற்றாத நிலை ஏற்படலாம்.
3. தேவையான அளவு அல்லது தேவைக்கு அதிகமாகவே வந்து நம் கையில் தங்காமல் போகலாம். எது எப்படியோ, பல சமயங்களில் நாம் பணமின்றி அல்லாட நேரிடும் நிலை ஏற்படலாம். அதற்குப் பெயர்தான் நிஸ்வா யோகம்
அதற்கான அமைப்பு என்ன? இரண்டாம் வீட்டு அதிபதி தீமைபயக்கும் 6, 8, 12ஆம் வீடுகள் ஒன்றில் ஜாதகத்தில் இருப்பது இந்த அமைப்பாகும். இந்த அவயோகமாகும்.
ஆகவே, பனம், பொருள், செல்வம் இல்லாவிட்டால் வாழ்க்கை என்னவாகும் என்பது என்னைவிட உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும் என்பதால் இதற்கு விளக்கம் எழுதவில்லை. உங்கள் சிந்தனைக்கே அதை விட்டுவிடுகிறேன்.
பரிகாரம் என்ன? உபவாசம் இருப்பதும், தீவிர இறைவழிபாடும் மட்டுமே இதற்குப் பரிகாரம். பிரச்சினை முழுமையாக நீங்கி விடுமா? ஓரளவு குறையும். அதோடு தாக்குப்பிடிக்கும் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்
எச்சரிக்கை: யோகங்கள் என்பது வடித்த சாதத்தைப் போன்றது. வடித்த சாதத்தில், பருப்பையும் நெய்யையும் சேர்த்தால் சுவையாக இருக்கும். அல்லது சாம்பாரை ஊற்றிக் குழைத்துச் சாப்பிட்டால், வேறு ஒரு சுவை கிடைக்கும். வற்றல் குழம்பு, மோர்க்குழம்பு, ரசம், தயிர் என்று விதம் விதமாகச் சேர்க்கும்போது, விதம் விதமாகச் சுவையான உணவு கிடைக்கும். அதுபோல யோகங்களுடன், மற்ற கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை, சுயவர்க்கப்பரல்கள் எனும் மசாலாக்களைச் சேர்க்கும்போது யோகங்களின் சுவை அதாவது தன்மை அதாவது பலன்களும் மாறுபடும். அதை நினைவில் வையுங்கள் ஆகவே இந்த அவயோகம் இருப்பவர்கள், பயந்துவிடாமல், ஜாதகத்தின் மற்ற அம்சங்களையும் அலசிப் பார்க்க வேண்டுகிறேன்.
|