தரித்திர யோகம். இது ஒரு அவயோகம்.
பொருள் இல்லாத, கையில் காசு இல்லாத, அன்றாடம் பணத்திற்கு அல்லாடும் நிலைமையை, தரித்திர நிலைமை என்று வைத்துக் கொள்ளலாம். வேறு விதமான தரித்திரங்களும் உள்ளன. ஆனால் அவற்றை யாரும் சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை. உதாரணத்திற்கு, திருமணமானவர்களுக்கு, அனுசரனையான மனைவி இல்லை என்றால், அதுவும் தரித்திர நிலைமைதான். சோம்பேறியான கணவன் அல்லது மனைவி வாழ்க்கைக்குத் தரித்திரமானவர்களே!
யோகத்தின் அமைப்பு: பலவிதமான அமைப்புக்கள் உள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்று இருந்தாலும் இந்த யோகம் உண்டு. மனிதனை அல்லாட வைக்கும் கிரக அமைப்புக்கள்:
1. குரு 8ஆம் வீட்டு அதிபதியாக இருந்து, ஜாதகத்தில் லக்கினாதிபதியும், ஒன்பதாம் அதிபதியும், 11ஆம் அதிபதியும் வலிமையின்றிக் கெட்டிருப்பது, இந்த யோகத்தை உண்டாக்கும்
2. குரு, செவ்வாய், சனி, புதன் ஆகிய நான்கு கிரகங்களும் நீசம் பெற்று அல்லது அஸ்தமனமாகி 5,6,8,11,12ஆம் வீடுகளில் அம்ர்ந்திருக்கும் நிலைப்பாடு இந்த யோகத்தை உண்டாக்கும்.
3. ஒன்பதில் சனி இருந்து மற்றொரு தீய கிரகத்தின் பார்வையைப் பெறுவதும், லக்கினத்தில் சூரியனும், புதனும் கூட்டாக இருந்து, நவாம்ச லக்கினம் மீனமாக இருக்கும் நிலைமை இந்த யோகத்தை உண்டாக்கும்
4. குரு, புதன், சுக்கிரன், சனி, செவ்வாய் ஆகிய கிரகங்கள் 8,6,12,ஆம் வீடுகளில் இருப்பதும், 12ஆம் வீட்டதிபதி சூரியனின் பார்வையைப் பெறுவதும் இந்த யோகத்தை உண்டாக்கும்
5. வலிமை குன்றிய சுக்கிரன், குரு, சந்திரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் 1,10,11,6,7,8 ஆகிய வீடுகளில் அமர்ந்திருக்கும் நிலைமை இந்த யோகத்தை உண்டாக்கும்
6. நீசம் பெற்ற சுக்கிரன் லக்கினத்தில் இருந்து, (கன்னி லக்கினத்திற்கு மட்டும் அது சாத்தியம்) ஜாதகத்தில் குரு, சந்திரன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் நீசம் பெற்றிருக்கும் நிலை இந்த யோகத்தை உண்டாக்கும்!
7. நவாம்ச லக்கினம், சனி, மற்றும் வலிமை குன்றிய குருவின் பார்வையில் இருப்பது இந்த யோகத்தை உண்டாக்கும்
8. குரு ஜாதகத்தில் 6 அல்லது 8ஆம் வீட்டில் இருந்து, குருவிற்கு அந்த இடம் ஆட்சி அல்லது உச்ச வீடாக இல்லாமல் இருக்கும் நிலை இந்த யோகத்தை உண்டாக்கும்
9. லக்கினம் ஸ்திர ராசியாக இருந்து, கேந்திர கோணங்களில் தீய கிரகங்கள் வலுவாக இருக்கும் நிலைமை இந்த யோகத்தை உண்டாக்கும்
10. இரவு நேரப்பிறப்பாக இருந்து, ஜாதகனின் கேந்திர கோணங்களில் நன்மை செய்யக்கூடிய கிரகங்கள் வலிமை இழந்து இருக்கும் நிலைமை இந்த யோகத்தை உண்டாக்கும் இந்தத் தரித்திர அமைப்புள்ள ஜாதகனின் வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும். அதிர்ஷ்டமில்லாமல் பல முயற்சிகளைச் செய்து கொண்டே இருக்க நேரிடும். வாழ்க்கை பலவிதங்களில் அவதியாக இருக்கும்.சமூகத்தில் உரிய மதிப்பு இருக்காது. எதிர்பாராத தோல்விகளைச் சந்திக்க நேரிடும். |