| புத்திர தோஷம் என்றால் என்ன? அதனை நிவர்த்தி செய்ய என்ன பரிகாரம்? |
புத்திர தோஷம் என்றால் என்ன? அதனை நிவர்த்தி செய்ய என்ன பரிகாரம்?
பதில்: புத்திர தோஷம் என்பது ஒவ்வொரு லக்கினத்திற்கும் வேறுபடும். பொதுவாக எந்த லக்னமாக இருந்தாலும் 5ஆம் இடம்தான் புத்திர ஸ்தானத்தை குறிக்கும். எனவே, அந்த 5ஆம் இடத்தை முக்கியமாக பார்க்க வேண்டும்.
“சேர்த்து வைத்த புண்ணியம்தான் குழந்தையாகப் பிறக்கும்” என்று பழமொழி உண்டு. அந்த வகையில் 5ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானமாகவும் திகழ்கிறது. தாய்மாமன், தாய்வழி உறவுகள், மனப்பான்மை ஆகியவற்றைக் குறிப்பதும் 5ஆம் இடம்தான்.
ஐந்தாம் இடத்தில் பாவ கிரகங்கள் (ராகு, செவ்வாய், சனி) அல்லது சூரியன் அமர்ந்தால் ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போகும் அல்லது தாமதமாக கிடைக்கும். ஒருவேளை 5ஆம் இடத்தில் உள்ள பாவ கிரகங்களை சுபக் கிரகங்கள் பார்த்தால் (ஒவ்வொரு லக்னத்திற்கும் சுபகிரகங்கள் வேறுபடும்- மேஷத்திற்கு சந்திரனும் சுபக்கிரகம்) குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ஐந்தாம் வீட்டிற்கு உரிய கிரகம் பாவ கிரகங்களுடன் சேர்ந்தாலும் புத்திர தோஷம் ஏற்படும். உதாரணமாக கடக லக்னத்தை உடைய ஒருவர் என்னைப் பார்க்க வந்திருந்தார். அவருக்கு 5ஆம் வீடு விருச்சிகம் (செவ்வாய்). ஆனால் அவரது ஜாதகத்தில் செவ்வாய் 8இல் மறைந்திருந்தது. அவருக்கு 5ஆம் இடத்தில் எந்தப் பாவ கிரகமும் கிடையாது. ஆனால் 5க்கு உரிய கிரகம் 8இல் மறைந்திருப்பதால், மனைவிக்கு கருக்கலைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கூறினேன். |