| அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில் |
|
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் அடிக்கடியோ அல்லது சதயம் நட்சத்திர நாளிலோ வழிபாடு செய்ய வேண்டிய தலம் திருவாரூர் மாவட்டம் திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்.
தல வரலாறு: அசுர வம்சத்தை சேர்ந்த பாணாசுரனின் தாயார் மாதினியார். இவள் செய்யும் சிவபூஜைக்காக, அவள் இருக்கும் இடத்திலேயே தினமும் புதுப்புது சுயம்பு லிங்கங்களை கொண்டு வந்து சேர்ப்பது பாணாசுரனின் வழக்கம். ஒருமுறை திருப்புகலூரில் ஏராளமான லிங்கங்கள் இருப்பதை பார்த்தான். அதில் சுயம்புலிங்கத்தை எடுத்து சென்று தாயாரிடம் ஒப்படைக்க நினைத்து, கோயிலை சுற்றிலும் அகழி தோண்டி லிங்கத்தை எடுக்க முயன்றான். அகழி முழுவதும் தண்ணீர் நிரம்பியதே தவிர, லிங்கம் பெயரவில்லை. என்ன செய்வது என தெரியாமல் தன் உயிரை விட நினைத்தான். அப்போது விண்ணில் அசரீரி தோன்றி, பாணாசுரனே! உனது தாயாரின் பூஜைக்கு நாம் எழுந்தருள்வோம் என கூறி மறைந்தது. தலையில் புன்னை மலருடன் அவனது தாயார் பூஜித்த இடத்துக்கு சென்றது லிங்கம். பூஜை முடிந்ததும் திருப்புகலூருக்கே லிங்கம் திரும்பி விட்டது.
சதயம் நட்சத்திர தலம்: அப்பர் தனது 81 வது வயதில் இத்தலத்தில் உழவார பணி செய்தபோது, இறைவன் சித்திரை சதய நட்சத்திர நாளில் முக்தி கொடுத்தார். முக்தி ஷேத்திரங்களில் இதுவும் ஒன்றாகும்.அப்பருக்கு தனி சந்நிதி. சித்திரை சதயத்தை ஒட்டி 10 நாள் திருவிழா நடக்கிறது. அப்பர் சித்திரை சதயம் நான்காம் சாமத்தில் இறைவனிடம் ஜோதியாக ஆகும்போது பக்தர்கள் கண்ணில் நீர் வழிய தரிசிப்பது கண்கொள்ளா காட்சி ஆகும். ஒரே கோயிலுக்குள் திருநாவுக்கரசரும், சுந்தரரும் பாடிய இரு சன்னதிகள் உள்ளது. ஒரு சன்னதியிள் இறைவன் அக்னீஸ்வரர். இவருக்கு சரண்யபுரீஸ்வரர், கோணபிரான் என்ற பெயர்களும் உண்டு. இறைவி கருந்தார் குழலி. மற்றொரு சன்னதியின் இறைவன் வர்த்மானேஸ்வரர். இறைவி மனோன்மணி அம்மை. 63 நாயன்மார்களில் முருக நாயனார் இத்தலத்தில் அவதரித்துள்ளார். சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது சனிக்கிழமைகளில் வரும் சதய நட்சத்திர நாளில் இத்தலத்தில் வழிபாடு செய்தால், ஆயுள்விருத்தி, நல்ல ஆரோக்கியம், நற்பண்புகள் வந்து சேரும்.
அக்னி பகவானுக்கு சிலை: அக்னி பகவான் தவம் செய்து பாவ விமோசனம் பெற்ற தலமாகும். இங்கு இறைவன் சந்திரசேகரர் உருவத்தில் எழுந்தருளி அக்னி பகவானுக்கு காட்சி கொடுத்துள்ளார்.அக்னி பகவானுக்கு உருவம் இத்தலத்தில் உண்டு. 2 முகம், 7 கைகள், 7 ஜுவாலை, 4 கொம்புகள், 3 பாதங்கள் உடையவராக உள்ள இந்த அக்னி பகவான் விக்கிரகம் மிகவும் அபூர்வமானது மட்டுமல்ல அரியதும் கூட.வாஸ்து பூஜைக்கு இத்தலம் மிகவும் விசேஷமானது. அனுகிரக சனீசுவர பகவானுக்கும்,நளச் கரவர்த்திக்கும் ஒரே சந்நிதி. இத்தலத்து அம்பாள் கருந்தார்குழலி மிகவும் விசேசமானவள் . திருமணம் ஆகாத பெண்கள் வேண்டுதல் செய்து சாயரட்சை காலத்தில் வெள்ளை வஸ்திரம் சாற்றினால் திருமணம் கைகூடுவது நிச்சயம். இப்பகுதியில் பிரசவத்தால் இறப்பே ஏற்படாது என்ற ஐதீகம் உள்ளது.
இருப்பிடம்: திருவாரூர் மாவட்டம் நன்னிலத்திலிருந்து நாகபட்டினம் செல்லும் வழியில் நன்னிலத்திலிருந்து கிழக்கே 10 கி.மீ. தொலைவில் திருப்புகலூர் உள்ளது. திருவாரூர், நாகபட்டினம் ,மயிலாடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து பஸ் வசதி உண்டு.
திறக்கும் நேரம்: காலை 6 12 மணி, மாலை 4 இரவு 9 மணி.
போன்: 04366 236 970
|
|