|
அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில்
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் அடிக்கடியோ, தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ சென்று வழிபட வேண்டிய தலம் வேலு õர் மாவட்டம் வாணியம்பாடி பெரியநாயகி, சமேத அதிதீஸ்வரர் திருக்கோயில்.
தல வரலாறு : சத்திய லோகத்தில் பிரம்மாவும், சரஸ்வதியும் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பிரம்மா சரஸ்வதியிடம், உலக உயிர்களை படைக்கும் நான் தான் பெரியவன். எனவே தான் பிரம்மா, விஷ்ணு,சிவன் என எனது பெயரை முதலில் கூறுகிறார்கள், என இருமாப்புடன் கூறினார். இதைக்கேட்டுக்கொண்டிருந்த கலைமகளுக்கு சிரிப்பு வந்தது. இதனால் கோபமடைந்த பிரம்மா, வாணியை ஊமையாகும்படி சபித்தார். இதனால் வருந்திய வாணி பூலோகத்திற்கு வந்து சிருங்கேரியில் தவம் இருந்தாள். வாணியை பிரிந்த பிரம்மா, காஞ்சியில் வேள்வி செய்து பூர்ணாகுதி கொடுக்க முற்பட்டார். உடனிருந்த தேவர்கள் துணைவியார் இல்லாமல் வேள்வி பூர்த்தியாகாது என்றனர். உடனே வாணியை சமரசம் செய்து அழைத்து வந்தார். பாலாற்றின் வடகரையில் அமைந்துள்ள சிவாலயத்தில் அறச்சாலை அமைத்து தானம், தவம் செய்ய தொடங்கினார். இதனால் மகிழ்ந்த சிவனும், பார்வதியும் வாணிக்கு அருள்செய்து, வாணி நீ பாடு என்று அருளினர். ஊமைத்தன்மை நீங்கப்பெற்ற வாணி பாடினார். வாணி பாடிய தலமாதலால் இது வாணியம்பாடி ஆனது.
புனர்பூச நட்சத்திர தலம்: காச்யப முனிவரின் தர்ம பத்தினி அதிதி. இவள் புனர்பூசம் நட்சத்திரம் தோறும் இத்தலத்தில் விரதமிருந்து தேவர்களை பெற்றாள் என புராணங்கள் கூறுகிறது. எனவே புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் அடிக்கடியோ, தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ சென்று வழிபட வேண்டிய தலம் வாணியம்பாடி. மாதம் தோறும் புனர்பூசம் நட்சத்திரத்தில் மளிகைசாமான்கள் வாங்கினால் தானிய விருத்தி அதிகரிக்கும்.புதுவீடு, வாடகை வீடு பால் காய்ச்சுதல் போன்ற விருத்தியாககூடிய செயல்களை இந்த நட்சத்திரத்தில் செய்வது சிறப்பு வாணி வழிபட்டு அருள் பெற்ற தலமாதலால், குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பும், ஆசிரியர்கள் தங்கள் தொழிலை துவங்கும் முன்பும் இங்குள்ள வாணியை வழிபடுவது சிறப்பு. சரஸ்வதியே அருள் பெற்ற தலமாதலால், பள்ளிமாணவர்கள் தேர்வு எழுதும் முன்பு இங்கு வந்து வாணியை வழிபாடு செய்தால் அதிக மதிப்பெண் பெறலாம் என்பது நம்பிக்கை. ஹோட்டல் தொழில் செய்பவர்கள் அடிக்கடி இங்கு வந்து அதிதீஸ்வரரை வழிபட்டு ஏழைகளுக்கு அன்னதானம் செய்கிறார்கள். இதனால் தங்களது தொழிலில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் நீங்கும் என்பது நம்பிக்கை.
தல சிறப்பு : மேற்கு நோக்கிய கோயில். இந்த கோயிலை வழிபட்டால் ஆயிரம் கிழக்கு பார்த்த கோயிலை வழிபட்ட பலன் கிடைக்கும். இங்குள்ள தட்சிணாமூர்த்தி மான், மழு ஏந்தி, யோக பட்டை, சின்முத்திரையுடன் நந்தி மீது அமர்ந்து தவம் செய்யும் காட்சி சிறப்பானது.
இருப்பிடம் : வேலூரிலிருந்து (67 கி.மீ.) கிருஷ்ணகிரி செல்லும் வழியில் வாணியம்பாடி உள்ளது. இங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள பழைய வாணியம்பாடியில் கோயில் உள்ளது.
திறக்கும் நேரம் : காலை 6.30 - 10.30 மணி -, மாலை 5 - இரவு 7 மணி வரை திறந்திருக்கும் போன் : 04174 226 652,99941 07395
|