|
சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை மஞ்சள் ஆடை உடுத்தி, திருநாமம் தரித்துக் கொண்டு, பாலாஜியை மனதிலே நினைத்து (நாமக்கட்டிக்கும் தனித்துவம் தரும் மாதம்!) சொம்பின் பக்கவாட்டிலும் மஞ்சள் பூசி, வீடு வீடாகச் சென்று பிசஷா அரிசி காணிக்கையாக வேண்டுவர்.
பின்னர் இவ்விதம் காணிக்கையாகப் பெற்ற அரிசியை தன் வீட்டுக்குக் கொண்டு வந்து, வேங்கடவனை நினைந்து, பொங்கல் வைத்து நிவேதனம் செய்து அக்கம் பக்கத்து வீட்டார்களுக்கு அந்தப் பிரசாதத்தைத் தருவர்.
மேலும் சிலர், தான் நினைக்கும் காரியம் நல்லபடியாக நிறைவேறி விட்டால் திருப்பதிக்கு வருகிறேன் என்றும், இன்னும் சிலர் திருப்பதிக்கு வந்து மொட்டை கொடுக்கிறேன் என்பது போன்ற அவர்களால் இயன்ற வேண்டுதல்களை மனதில் நினைந்து காசை மஞ்சள் துணியில் முடிந்து வைப்பர்.
புரட்டாசி மாத சனிக்கிழமையில் விரதம் இருந்து, மஞ்சள் ஆடை உடுத்தி, பாத யாத்திரையாகவே ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி, ஏழு நாட்களுக்கு அந்த யாத்திரையை தொடர்ந்து, ஏழாவது நாளான சனிக்கிழமையன்று பாலாஜியை தரிசித்து யாத்திரையை முடித்துக் கொள்ளும் வழக்கம் பேருந்து வழி இல்லாத அந்தக் காலத்திலேயே இருந்ததென்றாலும், சகல வசதிகளும் உள்ள இந்த நாள்களிலும் தொடர்வதுதான் வேங்கடவனின் மகிமைக்குச் சான்று.
சென்னையிலிருந்து திருப்பதிக்குப் பாதயாத்திரை மேற்கொள்பவர்களும் இருக்கிறார்கள். புரட்டாசி மாத சனிக்கிழமையில் விரதம் இருந்து வழிபடும் பக்தர்களுக்கு பல நலங்களையும் வளங்களையும் வாரி வழங்குகிறார் திருப்பதி பாலாஜி.
|