|
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது தங்களது பிறந்த நட்சத்திரத்தன்றோ சென்று வழிபாட செய்ய வேண்டிய தலம் சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி பிரம்மபுரீஸ்வரர் கோயில்.
தல வரலாறு: பிரம்மா ஐந்து தலைகளுடன் இருந்ததால், ஆணவத்துடன் இருந்தார். இதனால், சிவன் அவரது ஒரு தலையைக் கொய்தார். சிவபாவத்திற்கு ஆளான பிரம்மா, தவறுக்கு மன்னிப்பு கிடைக்க பல தலங்களில் சிவபூஜை செய்தார். அவ்வாறு பூஜித்த தலங்களில் இதுவும் ஒன்று. பிரம்மாவிற்கு அருளியதால் சிவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. அம்பாள் பிரம்ம வித்யாம்பிகை எனப்பட்டாள். இக்கோயில் காலப்போக்கில் அழிந்து விட்டது. அதன்பின் சிவன், அம்பிகைக்கு புதிதாக கோயில் எழுப்பப்பட்டது. சிவனுக்கு சுந்தரேஸ்வரர் என்றும், அம்பிகைக்கு மீனாட்சி என்றும் பெயர் சூட்டினர். பிரம்மா பூ சூட்டி வணங்கியதால் பூங்குடி எனப்பட்ட தலம் காலப்போக்கில் கீழப்பூங்குடி என அழைக்கப்பெற்றது. அம்மன் பூங்குடியாள் என்ற பிரம்ம வித்யாம்பிகைஆனாள்.
உத்திராடம் நட்சத்திர தலம்: ஆடம் என்றால் முதலில் தோன்றியது என்று பொருள். 27 நட்சத்திரங்களில் உத்திரம் நட்சத்திரத்திற்கும் மூத்த நட்சத்திரமாக உத்திராடம் விளங்குகிறது. எனவே தான் முதன் முதலில் தோன்றிய உத்திராட நட்சத்திர தேவியான பூங்குடியாளை 26நட்சத்திர தேவியரும் பாதபூஜை செய்வதாக கூறப்படுகிறது. உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கான பரிகார வழிபாட்டுத் தலம் இது. இந்த நட்சத்திரக்காரர்களுக்கு ஏற்படும் சகலவிதமான தோஷங்கள் நீங்கவும், எந்த பிரார்த்தனைக்கும் உத்திராடம் நாளில் வந்து வழிபடலாம். அன்று சிவனுக்கு விசேஷ பூஜையும் உண்டு.
விசேஷ சிவத்தலம்: பவுர்ணமி நாட்களில் சிவனுக்கு விசேஷ பூஜை உண்டு. நாற்பது கிராமங்களுக்கு மத்தியில் அமைந்த சிவன் கோயில் இது. சித்திரை பிறப்பன்று காலையில் இக்கோயிலில் விசேஷ ஹோமம் நடக்கும். அப்போது, இங்குள்ள அனைத்து சுவாமிகளுக்கும் விசேஷ பூஜை உண்டு. அன்றிரவில் பஞ்சமூர்த்திகளும் புறப்பாடாவர். மதுரையில் மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் நடக்கும் நாளில், இங்கும் திருக்கல்யாணம் நடக்கும். மார்கழி திருவாதிரையன்று இரவில் அம்பாள் சன்னதியில் அதிகமான பூக்களை நிரப்பி விசேஷ பூஜை நடக்கும்.
லிங்கோத்பவர் பூஜை: ஐந்து நிலை கோபுரத்துடன் அமைந்த கோயில் இது. எதிரே தீர்த்தக்குளம் உள்ளது. தனிச்சன்னதியிலுள்ள நடராஜர், ஆடுவதற்கு தயாரான நிலையில் அள்ளி முடிந்த சடாமுடியுடன் காட்சி தருகிறார். இங்குள்ள பைரவருக்கு, தேய்பிறை அஷ்டமியில் விசேஷ பூஜை உண்டு. சிவன் சன்னதிக்கு பின்புறம் கோஷ்டத்திலுள்ள லிங்கோத்பவருக்கு திருக்கார்த்திகையன்றும், சிவராத்திரி இரவில் மூன்றாம் காலத்திலும் விசேஷ பூஜை நடக்கும்.
இருப்பிடம்: சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள (12 கி.மீ.,) ஒக்கூர் சென்று, அங்கிருந்து 3 கி.மீ., சென்றால் இவ்வூரை அடையலாம். ஆட்டோ உண்டு. மதுரையில் இருந்து (45 கி.மீ.,) இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை இவ்வூருக்கு நேரடி பஸ் வசதி உண்டு.
திறக்கும் நேரம்: காலை 7 11 மணி, மாலை 5 இரவு 8 மணி.
போன்: 99436 59071, 99466 59072.
|