| பங்காளி தகராறைத் தீர்க்கும் பாறை! |
|
இந்தத் தலம் பங்காளிகளுக்கு இடையேயான பாகப் பிரிவினை, வஞ்சனை, பகைமை உணர்ச்சி ஆகியவை மாற மிகச் சிறந்த பரிகாரத் தலமாகத் திகழ்கிறது. விழுப்புரத்துக்கு வடமேற்கே விழுப்புரத்தில் இருந்து சூரப்பட்டு வழியில் 6 கி.மீ. தொலைவு சென்றால் இந்தத் தலத்தை அடையலாம். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம். சுவாமியின் பெயர் அபிராமேஸ்வரர். அம்பிகை- முத்தாம்பிகை. முத்தார்நகையம்மை உடனுறை அழகியநாதராக அழைக்கப்படுகிறார். காமதேனு பூஜித்து அருள் பெற்றதும், பசுக்கள் தவம் புரிந்து கொம்புகளைப் பெற்றதும் இங்கேதான் எனத் தலபுராணம் கூறும். ஆக்கள் (பசுக்கள்) பூஜித்த காரணத்தால் இத்தலம் ஆமாத்தூர் என்று பெயர் பெற்றது. அபிராமேஸ்வரர், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பசுக்கள் பூஜை செய்ததன் அடையாளமாக சுயம்பு லிங்கத்தின் மேல் சந்திரனின் பிறை போல் வளைந்து பசுவின் கால் குளம்பின் சுவடு தென்படுகிறது. ராமபிரான், பிருங்கி முனிவர், கோடி முனிவர் முதலியோர் வழிபட்டுப் பலன் பெற்ற பதி இது. இந்தக் கோயில் அம்பிகை சந்நிதியின் பிராகாரச் சுற்றில் வட்டப்பாறை ஒன்று உள்ளது. இதன் முன் சென்று சத்தியப் பிரமாணம் செய்வது வழக்கமாக இருந்துள்ளது. ராமாயணத்தில் வாலியைக் கொல்லும் முன் ராமபிரானும், சுக்ரீவனும் அனுமனை சான்றாக வைத்து நட்பு கொண்டபோது இந்தப்பாறை முன்னர் நின்று உடன்பாடு செய்து கொண்டனராம். எனவே, ஊரில் உள்ளோர் இந்த வட்டப்பாறையின் மீது கை வைத்து சத்தியம் செய்து தங்கள் வழக்குகளை தீர்த்துக் கொள்வராம். இது ஒரு சிறிய சந்நிதியாக உள்ளது. இதன் முன் நின்று பொய் சொல்வோர் துன்பத்துக்கு ஆளாவராம். இதற்கு சுவாரஸ்யமான கதை ஒன்றையும் சொல்கிறார்கள். ஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பி இருவர். தாய் தந்தையின்றி தனித்திருந்தனர். அவர்களுக்கு பெரும் சொத்து இருந்தது. அவை அனைத்தையும் தங்கமாக மாற்றி அவற்றை ஒரு கைத்தடிக்குள் வைத்து தம்பியை ஏமாற்றினான் அண்ணன். அப்பாவித் தம்பியோ ஊர்க்காரர்களிடம் முறையிட, அவர்கள் அண்ணனை வட்டப்பாறைக்கு வந்து சத்தியம் செய்யுமாறு சொன்னார்கள். அவனும் தன் கைத்தடியை தம்பியிடம் கொடுத்து, சத்தியம் செய்துவிட்டு வந்து வாங்கிக்கொள்கிறேன் என்று சொல்லி, வட்டப்பாறை முன் நின்று சத்தியம் செய்தான். "என்னிடம் சொத்து எதுவும் இல்லை. எல்லாம் என் தம்பியிடம்தான் உள்ளது என்றான். வட்டப்பாறை அவனை எதுவும் செய்யவில்லை. எனவே ஊரார் அதை உண்மை என நம்பிக் கலைந்து சென்றனர். ஆனால், தம்பியோ இறைவனிடம் தான் ஏமாற்றப்பட்டதைக் கூறி, அழுது புலம்பினான். சற்று தொலைவு சென்ற அண்ணன் "திருவட்டப்பாறை என்ன கொத்திடுமோ என்று ஏளனமாகக் கேட்டான். இதனால் வெகுண்டார் ஈசன். அங்கே தோன்றிய கருநாகம் ஒன்று அண்ணனைக் கொத்தியது. அடுத்த நொடி அவன் இறந்தான். அவனைத் தீண்டிய நாகத்தின் தலைப்பகுதி நாகத்தம்மன் என்ற பெயரோடு அருகில் உள்ள தும்பூர் எனும் தலத்தில் அருள்பாலிக்கிறது. வால்பகுதி இந்தத் தல இறைவி முத்தாம்பிகையின் மார்பில் அலங்கரிக்கிறது என்பது தலபுராணம். இந்தத் திருவட்டப்பாறை லிங்கேஸ்வரரை தரிசித்தால் தீராத சிக்கல்கள், ஓயாத பிரச்னைகள் எல்லாம் தீர்வதோடு, மனம் தெளிவாகும். எளிதில் தீராத வழக்கு தொடர்பான பிரச்னைகள் இங்கே வந்து வழிபட சுமுகமாகத் தீர்வு கிட்டும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. கூடுதல் தகவல்: வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் சமாதி இந்த ஊரின் வெளிப்புறத்தில் உள்ளது. தரிசன தகவலுக்கு: ஆலய குருக்கள் - மகேஷ், தொலைபேசி எண்: 04146 223319
|