| தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு |
|
தமிழ்க்கடவுளின் தளபதி : ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து புறப்பட்ட தீப்பொறிகளே ஆறுமுகம் கொண்ட பிள்ளையாக மாறியது. அந்த தீப்பொறிகள் சிவபெருமானின் நெற்றிக் கண்களில் இருந்து கிளம்பியதைக் கண்டதும் பார்வதிதேவி அஞ்சி ஓடினாள். அப்போது தேவியின் பாதத்தில் அணிந்திருந்த சிலம்பிலிருந்து நவமணிகள் சிதறி நாலாபுறமும் ஓடின. நவமணிகளில் இருந்து நவசக்திகள் தோன்றினர். அந்த நவசக்திகளிடமிருந்து நவவீரர்கள் அவதரித்தனர். வீரபாகு, வீரகேசரி, வீரமகேந்திரர், வீரமகேஸ்வரர், வீரபுரந்தரர், வீரராக்கதர், வீரமார்த் தாண்டர், வீராந்தகர், வீரதீரர் என்னும் வீரர்களே அவர்கள். இவர்களே சூரசம்ஹாரத்தின் போது முருகப் பெருமானுக்கு துணை நின்றனர். ராமநாமம் ஒலிக்கும் இடத்தில் அனுமன் இருப்பதைப் போல, முருகநாமம் ஒலிக்கும் இடங்களில் எல்லாம் வீரபாகு இடம்பெற்றிருப்பார். அருணகிரிநாதர் பாடிய வீரவாள் வகுப்பு என்னும் பாடலில் முருக பக்தர்களை வீரபாகு உடன் நின்று காப்பதைப் போற்றிப்பாடியுள்ளார். பத்மாசுரனின் மகன் வஜ்ரவாகுவை வீரபாகு தான் வதம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்ப் புத்தாண்டில் தமிழ்க்கடவுளான முருகனுடன் அவரது வீரத்தளபதி வீரபாகுவையும் வணங்குவோம்.
விக்ருதி ஆண்டில் பலன் தரும் நரசிம்ம விரதம் : விக்ருதி ஆண்டின் நாயகனாக(ராஜா) நவக்கிரகங்களில் பலம் பெற்ற செவ்வாய் விளங்குகிறார். செவ்வாயின் ஆதிக்கம் மிக்க இந்த ஆண்டில் நன்மை பெற, லட்சுமி நரசிம்ம விரதத்தை மேற்கொள்வது நல்லது. எளிமையான இந்த விரதத்தை யார் வேண்டுமானாலும் பின்பற்றலாம். இரணியனை வதம் செய்த மகாவிஷ்ணுவின் கண்கள் தீப்பொறிகளை போல சிவந்தன. திருமகள் கூட அருகில் செல்வதற்கு அஞ்சி நின்றாள். ஆனால், பிரகலாதனைக் கண்டதும் அவரது உள்ளத்தில் கருணை பெருகியது. கோபம் அடியோடு மறைந்து, அந்த சிங்க முகத்திலும் புன்னகை அரும்பியது. குட்டிக்குழந்தையான பிரகலாதனை கட்டி அணைத்து மகிழ்ந்து தன் அன்பை வெளிப்படுத்தினார். நரசிம்மரை வழிபடுவதற்கு முற்பிறவிகளில் தவம் செய்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் அந்த பாக்கியம் நமக்கு கிடைக்காது. செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைபடுபவர்கள், செவ்வாய் திசை நடப்பவர்கள் லட்சுமி நரசிம்ம விரதம் இருப்பது மிகச்சிறந்த நன்மைகளைத் தரவல்லது. நீண்டகாலத் துன்பங்களைக் கூடப் போக்கும் சக்தி இந்த விரதத்திற்கு உண்டு. 48 நாட்கள் தொடர்ந்து இவ்விரதம் இருக்கவேண்டும்.
விரதமுறை: பூஜை அறையில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக லட்சுமி நரசிம்மர் படத்தை வைத்து நெய்தீபம் ஏற்ற வேண்டும். காய்ச்சிய பசும்பால் அல்லது வெல்லம், எலுமிச்சை அல்லது புளி கலந்த பானகத்தை நிவேதனமாக படைக்க வேண்டும். நரசிம்மரின் பிரபத்தி மந்திரமான லட்சுமி நரசிம்மம் சரணம் ப்ரபத்யே (லட்சுமி நரசிம்மனே உன்னைச் சரணமாகப் பற்றுகிறேன்) என்ற மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். நிவேதித்த பிரசாத பால் அல்லது பானகத்தை பக்தியோடு பருகவேண்டும். நரசிம்மரின் அவதாரம் மாலை நேரத்தில் நிகழ்ந்ததால் இவ்வழிபாட்டை மாலையில் செய்வது சிறப்பாகும். இயலாதவர்கள் காலை நேரத்தில் செய்யலாம். இவ்விரத பலனால் கொடிய நோய், மனக்கவலை, எதிரிகளின் தொல்லை, கவலைக்குரிய கடன்கள் தீர்தல் ஆகிய நற்பலன்கள் ஏற்படும். தடைபட்ட திருமணம், குழந்தைப்பேறு விரைவில் கைகூடும். பெண்கள் இவ்விரதத்தை மேற்கொண்டால் மாதவிலக்கு நாட்களில் அவர்களுக்கு பதிலாக வீட்டில் யாரேனும் ஒருவர் இவ்வழிபாட்டை தொடர வேண்டும். ஒருநாள் கூட விட்டுப் போகக்கூடாது.
வெளியூர் செல்வதாக இருந்தால், படத்தை நம் கையிலேயே எடுத்துச் சென்று எங்கு தங்குகிறோமோ அங்கேயே பூஜை செய்ய வேண்டும். அன்று சிறிதளவு கல்கண்டை நைவேத்யம் செய்தால் போதும். நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை என்பார்கள். எப்போது லட்சுமி நரசிம்மனை சரணடைகிறீர்களோ, அப்போதே பிள்ளையாக ஏற்று நம்மை மடியில் தாங்கிக் கொள்ளும் கருணைக்கடல் அவன். விக்ருதி என்பதற்கு மாறுதல் என்று பொருள். லட்சுமி நரசிம்ம விரதம் இருப்பவர்களுக்கு, இந்த புதிய விக்ருதி ஆண்டில் நல்ல மாற்றங்களை அள்ளி வழங்கிடும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இந்த விரதத்தை பிரதோஷம், சுவாதி நட்சத்திரம் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் தொடங்குவது சிறப்பானது.
அறுசுவை உணவு ஏன்?புத்தாண்டு பிறக்கும் நாளில் அறுசுவை உணவு வகைகளை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்பதை ஒரு வழக்கமாக நாம் பின் பற்றுகிறோம். இனிப்பு, காரம்,புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கசப்பு என்பவையே அறுசுவையாகும். தேன்குழல், அதிரசம், காரமான உணவுவகைகள், மாங்காய் பச்சடி, புளிக்கூட்டு, உப்புவற்றல், வாழைப்பூ வடை,வேப்பம்பூ பச்சடி என்று எல்லா வகை உணவுகளும் இடம்பெற்றிருக்கும். வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறித் தான் உண்டாகும். துன்பக் கலப்பில்லாத இன்பத்தை நாம் பெறவே முடியாது என்பதை நமக்கு உணர்த்துவதற்காகத் தான் சாப்பிடும் உணவிலேயே அறுசுவைகளையும் சேர்த்துக் கொள்கிறோம். வாழ்க்கை இன்பமும் துன்பமும் கலந்தது என்பதை அறுசுவை உணவு உணர்த்துகிறது.
கல்யாணக்கோலம் தந்த ஈசன் : பார்வதி-சிவபெருமான் கல்யாண வைபவம் பங்குனி உத்திரத்தில் நிகழ்ந்தது. இந்த வைபவத்தைக் காண உலக உயிர்கள் அனைத்தும் ஓரிடத்தில் கூடினர். பூமி பாரம் தாங்காமல், வடபுறம் தாழ்ந்து தென்புறம் உயர்ந்தது. திருக்கல்யாணத்தைக் காண வந்திருந்த அகத்தியரை அழைத்தார் ஈசன். அகத்தியரே! பூபாரத்தை நீர் தான் சரி செய்ய வேண்டும். உடனே தென்திசைக்கு செல்லும்! உமக்கு அங்கேயே தேவியோடு கல்யாண கோலத்தில் காட்சி தருவேன், என்று அருள்செய்தார். ஐயனின் வேண்டுகோளை ஏற்ற அகத்தியர் பொதிகை மலை வந்து சேர்ந்தார். பூமியைத் தன் தவசக்தியால் சமப்படுத்தினார். தான் கொடுத்த வாக்குப்படி, சித்திரை முதல்நாளில் திருக்கல்யாண கோலத்தில் சிவன் காட்சிதந்தார். இந்த நிகழ்ச்சி திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் சித்திரை விசுவன்று நள்ளிரவில் சிறப்பாக நடக்கிறது.
உச்சவீட்டில் சூரியன் : பன்னிரு ராசிகளில் முதல் ராசியான மேஷ வீட்டில் நவக்கிரக நாயகன் உச்சம் பெறுகிறார். சூரியனின் ஒவ்வொரு ராசிப்பெயர்ச்சியும் வழிபாட்டுக்குரிய நாளாக அமைந்தாலும், மேஷம், கடகம், மகரம், சிம்மம் ஆகிய ராசிகள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றவையாகும். அதில் சித்திரை மாதத்தில் தான் சூரியன் மேஷ வீட்டில் முழுவீச்சோடு அதிகபலம் பெறுகிறார். கத்திரி என்னும் அக்னி நட்சத்திரமாக சூரியனின் உக்கிரம் இம்மாதத்தில் அதிகமாக இருக்கும். இதனை அக்னி நட்சத்திர தோஷம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை 21 முதல் வைகாசி 14 வரை கத்திரி காலம் ஆகும். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகளின் பிரதிநிதியாக சூரியன் விளங்குகிறார். நம் கண்களுக்கு புலனாகும் கடவுளாக இருப்பதால்கண் கண்ட தெய்வம் என்றால் அது சூரியனையே குறிக்கும். வேதமந்திரங்களின் தலைசிறந்த மந்திரமான காயத்ரி மந்திரம் சூரியனுக்கு உரியதாகும். சூரிய நமஸ்காரம் என்று சிறப்பான வழிபாட்டு முறையை நம்நாட்டினர் மிகப் பழங்காலத்திலேயே யோக சாஸ்திரத்தில் பின்பற்றியுள்ளனர். பிதுர்காரகராக இருந்து முன்னோர்களுக்குச் செய்யும் தர்ப்பணத்தை பிதுர்லோகம் கொண்டு சேர்ப்பவர் இவரே. நட்சத்திரங்களில் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் இவருக்கு உகந்ததாகும். போரில் வெற்றி பெற சூரியன் அருளை வேண்டி ராமபிரான் அகத்திய முனிவரிடம் ஆதித்ய ஹ்ருதயம் என்னும் மந்திரத்தை உபதேசம் பெற்றார். சூரியனை வழிபாடு செய்பவர்கள் நீண்ட ஆயுள், தலைமைப்பதவி, ஆரோக்கியம், அரசாங்கத்தால் நன்மை பெற்று வாழ்வர். |