| ஆயில்யம் நட்சத்திர தோஷ வழிபாடு |
|
ஆயில்யம் நட்சத்திரத்தின் முழுமையான நாழிகை 56. இந் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் விஷ்ணு, கிரகம் புதன். ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எவ்வளவு எதிரிகளையும் சாமர்த்தியமாக வென்று விடுவார்கள். தன்னுடைய முடிவு எதுவோ அதையே செயல்படுத்துவார்கள்.
ஆனால் பிறர் சொல்லுவதை பொறுமையுடன் கேட்பார்கள். தாய், தந்தையர் மீது பாசமுள்ளவர்கள் காடு மலைகளில் சுற்றித்திரிய விருப்பமுள்ளவர்கள். கோபமும் வேகமும் கொண்ட இவர்கள் செல்வந்தர்களாக இருப்பர் சிவந்த மேனி, அகலமான கண்களைப் பெற்றிருப்பர்.
நியாய தர்மங்களை மற்றவர்களுக்கு போதிப்பர். மந்த குணமும் இருக்கும் நகை அணிதல், பணம் சம்பாதிப்பதில் அலாதிப் பிரியம் இருக்கும். செலவு செய்வதில் கெட்டிகாரர்களாக திகழ்வர்.
இந்த நட்சத்திர அதிபதியாக புதன் கிரகம் உள்ளது என்கிறார் விஜய்சுவாமிஜி. அவர் மேலும் கூறியதாவது:-
அவதாரங்கள் :
உலகில் அதர்மம் தலையெடுக்கும் போது விஷ்ணு உலகில் அவதரித்து உலகைக் காப்பதாக வைணவர்கள் கருதுகின்றனர். இவ்வாறு இவருடைய பத்து அவதாரங்களாக (தசாவதாரம்) கூறப்படுபவை பின்வருவன: மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மர், வாமனர், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி.
வட இந்தியர் சிலர் பலராமருக்கு பதிலாக புத்தரை பத்து அவதாரங்களுள் ஒருவராக கருதுகின்றனர். பாகவத் புராணத்தில் இருபத்தைந்து அவதாரங்கள் கூறப்படுகிறது என்கிறார் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையை சேர்ந்த விஜய் சுவாமிஜி.
விஷ்ணு::
ஆயில்யம் நட்சத்திரகாரர்கள் வழிபட வேண்டிய தெய்வம் விஷ்ணு. மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படுபவர்களுக்கு விஷ்ணுவும் ஒருவர். சிவனும், பிரம்மாவும் ஏனைய இரு கடவுள்கள். பிரம்மா படைத்தலுக்கும், விஷ்ணு காத்தலுக்கும், சிவன் அழித்தலுக்கும் உரியவர்களாகச் சொல்லப்படுகின்றது.
விஷ்ணு சங்க காலத்திலிருந்தே தமிழில் திருமால் என்றும் அழைக்கப்படுகிறார். இந்து சமயத்தின் ஒரு பிரிவான வைணவ சமயத்தினர் விஷ்ணுவையே முழு முதற் கடவுளாக வழிபட்டு வருகின்றனர்.
உடலில் மாற்றம் ஏற்படுத்தும்:::
வானத்தில் கலப்பை வடிவில் நட்சத்திரங்களின் ஒரு கூட்டம் இருக்கிறது. இந்த நட்சத்திரங்களுக்கு ஆயில்யம் நட்சத்திரம் என்பார்கள். பொதுவாகவே கிரகங்களும், நட்சத்திரங்களும் மனித உடல் நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.
ஆயில்யம் நட்சத்திரத்தின் கெட்ட கதிர்வீச்சுகள் மனிதனின் உடலையும் உள்ளத்தையும் தாக்கும் போது நோய்களும், மனவேதனைகளும் உண்டாகும். இதற்கு புன்னை மரம் உள்ள கோவில்களுக்கு சென்று அங்கு அம்மரத்தை தொட்டு வணங்கி இம்மரத்தடியில் சிறிது நேரம் அமர்ந்து சாங்கிய சம்பிரதாயப்படி தோஷத்தை கழிப்பார்கள்.
பலமுறை அம்மரத்தை சுற்றியும் வலம் வருவார்கள். ஆயில்யம் நட்சத்திரகாரர்கள் வழிபட வேண்டிய கோவில் கற்கடேஸ்வரர் கோவில். இக்கோவில் கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூரில் உள்ளது. ஒரு சமயம் துர்வாசமகரிஷி, சிவபூஜை செய்து விட்டு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே சென்ற ஒரு கந்தர்வன் துர்வாசரின் நடையைப் பார்த்து நீர் நண்டு ஊர்ந்து செல்வதைப் போல நடக்கிறீர் என்று கேலி செய்ததுடன், அவரைப் போல நடித்தும் காட்டி அவமானப் படுத்தினான். கோபம் கொண்ட துர்வாசர் அவனை நண்டாக பிறக்கும்படி சபித்து விட்டார்.
வருந்திய கந்தர்வன் மன்னிப்பு வேண்டினான். துர்வாசரின் அறிவுரைப்படி இத்தலத்தில் நண்டு வடிவில் பூஜை செய்து சாபவிமோசனம் பெற்றான். சுவாமியின் திருமேனியில் நண்டு ஐக்கியமான துளையை இப்போதும் காணலாம்.
கற்கடகத்திற்கு (நண்டு) விமோசனம் தந்தவர் என்பதால் இவர் கற்கடேஸ்சவரர் என்று பெயர் பெற்றார். இந்திரன் தன் ஆணவம் நீங்க, குரு பிரகஸ்பதியின் ஆலோசனைப்படி இங்கு சிவபூஜை செய்தான்.
இங்கிருந்த புஷ்கரிணியில் தினமும் 1008 மலர் பறித்து சிவலிங்கத்திற்கு படைத்து வழிபாடு செய்து திருந்தினான். இதனால் இத்தலம் திருந்து தேவன்குடி என்றழைக்கப்படுகிறது. இப்பெயரைச் சொன்னால் உள்ளூர் வாசிகளுக்கு தெரிவதில்லை.
நண்டுகோயில் என்று சொன்னால் தான் புரியும்.ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் நட்சத்திர நாள் மற்றும் தேய்பிறை அஷ்டமி, நாட்களில் இத்தல இறைவனுக்கு நல்லெண்ணைய் சாத்தி வழிபாடு செய்தால் வாழ்வில் வளம் பெருகும்.
உடலும் உள்ளமும் நலம் பெறும். அமாவாசை, செவ்வாய், சனிக்கிழமைகளிலும் இங்கு வழிபாடு செய்யலாம். நீண்ட காலமாக நோயுள்ள பிற நட்சத்திரக்காரர்களும் இந்த நாட்களில் கற்கடேஸ்வரரையும் அருமருந்துநாயகியையும் வழிபட்டு, மருந்து சாப்பிட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இங்கு அருமருந்து நாயகி, அபூர்வநாயகி இரண்டு அம்பிகையர் காட்சி தருகின்றனர். பிரதான அம்பிகையாக அபூர்வநாயகி கருதப்படுகிறாள். நுழைவு வாயிலில் யோக சந்திரன் சன்னதி உள்ளது. இவர் யோக நிலையில் காட்சி தருகிறார். இத் தலத்தில் கற்கடக விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் சுதைவடிவில் நடராஜர் இருக்கின்றனர். நவக்கிரக சன்னதி கிடையாது.
புதன்வழிபாடு:::
புதன் கோள் சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோளாகும். மேலும் இது சூரியக் குடும்பத்தில் மிகச் சிறிய கோளாகும். இது ஒருமுறை சூரியனைச் சுற்றி வர 88 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. சூரியனிடமிருந்து புதனின் கோணப்பிரிகை குறைவாக உள்ளதால், பெரும்பாலும் சூரியனின் பொலிவு காரணமாக புதனை காண்பது அரிது. எனவே தான் நம் சான்றோர் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறுவர்.
காலை அல்லது மாலை கருக்கல் நேரமே புதனைக் காண்பதற்கு சரியான தருணம். தோற்றத்தில் கிட்டத்தட்ட பூமியின் நிலவை போன்றது புதன். இது வெட்டவெளியுடன் கூடிய பல பெரும்பள்ளங்களைக் கொண்டு விளங்குகிறது. புதன் நிலவுகள் கிடையாது.
ஆனால், புவிநிலவைப் போலன்றி, புதனுக்கு இரும்பாலான பெரிய உள்ளகம் உள்ளது. இதன் காரணமாக ஓரளவு காந்தப்புலமும் புதனுக்கு உண்டு. புதன் விரதத்தினை மேற்கொள்ளுபவர்களுக்கு கல்வி, ஞானம், தனம் போன்றவை பெருகுமென்ப தால் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் அனைவரும் அனுஷ்டிக்கலாம்.
புதன்கிழமையன்று நாராயணனை வழிபட்டு பின்னர் நவக்கிரகங்களை வணங்கி புத பகவான் முன் மதனநூல் முதல் நான்கு மறைபுகல் கல்வி ஞானம் விதமுடன் அவரவர்க்கு விஞ்சைகள் அருள்வோன் திங்கள் சுதன்பசு பாக்கியம் சுகம்வபல கொடுக்க வல்லான் புதன் கவிபுலவன் சீர்மமால் பொன்னடி போற்றி போற்றி! -என்று தோத்திரம் பாடி வணங்குவதால் சகல சிறப்புகளும் பொருந்தி வரும்.
புதனின் ஆற்றல் பெற::
நவக்கிரகங்களில் நான்காவதான இடத்தில் இருக்கும் இவரை பச்சை நிற ஆடையை உடுத்தி வணங்க வேண்டும். தீய குணங்களினால் உண்டான பீடைகளை நீக்கும் சக்தி புதன் தேவனுக்கு உண்டு. ஆகையால் கூட இவனை கிரக பீட காரகன் என்றும் கிரகபதி என்றும் கூறுவர்.
மதுரை திருக்கடையூர் திருவெண்காடு ஆகிய ஸ்தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்தால் புதன் அருள் கிடைக்கும். சந்திரன் ஆதிக்கம் கொண்ட ராசியில் உள்ள புதன் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மீனாட்சியம்மனை வழிபட்டால் மிகசிறப்பான பலன்களை அடைய முடியும்.
ஆடை வகைகளில் பச்சை நிற ஆடை அணிவதாலும் ரத்தினங்களில் மரகத கல் அணிவதாலும் பித்தளை பொருட்களை உபயோகப்படுத்துவதாலும் உணவு வகைகளில் உவர்ப்பு சுவைகளை விரும்பி உண்ணுவதாலும் மாதுளை பேரிச்சை, திராட்சை, முந்திரி கேப்பை கூழ் செய்து சாப்பிடுவதாலும் பாசிப்பயறு வகைகளை உண்பதாலும் புதனின் ஆதிக்கம் பெறலாம்.
வாயு கிரகத்தை வழிபாடு செய்வதாலும் நாயுருவி சமித்துகளால் பூஜை செய்வதாலும் மூங்கில் மரத்துக்கு நீர் ஊற்றுவதாலும் பச்சை கற்பூரம் தூபம் போடுவதாலும் புதனின் அருள்பெறலாம். புதன் ஆதிக்கம் பெற்றவர்கள் வாஸ்து சாஸ்திர முறைப்படி வடக்கு வடகிழக்கு திசைகளில் வசிக்கலாம். வீடுகள் கட்டலாம்.
மேலும் தொழில் அதிக பணம் ஈட்ட நினைப்பவர்கள் விந்திய மலை முதல் கங்கா நதி தீரம் வரை உள்ள பிரதேசங்களில் வசிக்கலாம். புதன் தோஷம் நீங்க வங்யங்நசிமசி என்று மந்திரம் ஜெபித்தால் புதன் தோஷம் நீங்கும். காக்கும் கடவுளின் திருவருளை நமக்கெல்லாம் வழங்கும் ஆற்றல் படைத்த புதனை இதயத்தில் இருத்தி வழிபடுவோம் என்கிறார் விஜய்சுவாமிகள்.
|