| பலன்தரும் பரிகாரத் தலம்: பதவிகளைத் தரும் உத்தமன் கோயில்! |
|
மகாபலிச் சக்கரவர்த்தி. தன்னைவிட தான தர்மத்தில் சிறந்தவர் இல்லை எனும் செருக்குடன் இருந்தான். ஒருமுறை, குல குரு சுக்ராசாரியரின் மூலம் யாகம் ஒன்றை நடத்தினான். மகாபலியின் கர்வம் அடக்கும் பொருட்டு வாமனராக அவதரித்தார் மகாவிஷ்ணு. கையில் குடையேந்தி குள்ள பிரம்மசாரி உருவில் யாகத்துக்கு வந்தார் வாமனர். தானம் பெற மகாபலி சொல்ல, வாமனரோ தன் பாதங்களால் அளக்கும் வண்ணம் மூன்றடி நிலம் கேட்டார். நடப்பது அறிந்து குரு தடுக்க, அதையும் மீறி தானம் தருவதாகச் சொன்ன மகாபலிக்கு, விசுவரூப தரிசனம் காட்டி, ஓரடியால் நிலம் அளந்து, மற்றோர் அடியால் வான் அளந்து, மூன்றாம் அடியால் மகாபலியை ஆட்கொண்டு, தான் யார் என்பதைப் புரியவைத்தார் ஸ்ரீவிஷ்ணு. இந்த உலகளந்த உத்தமனின் ஆலயம் இருப்பது திருக்கோவிலூர் நகரில். திரிவிக்ரம ஸ்வாமியாக அருள்பாலிக்கிறார் ஸ்ரீமந் நாராயணன். இருண்டு கிடந்த தமிழ் உலகில், வைணவத் தமிழ் வளர வித்து ஊன்றப்பட்டது இந்தத் தலத்தில்தான். இங்கேதான், முதல் ஆழ்வார்களான பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார் மூவரும் ஒன்று சேர்ந்து தங்கள் பாடல்களைப் பாடத் தொடங்கினர். ஒரு நாள் கனமழை பொழிந்த நேரம். பெருமானை தரிசிக்க வந்த பொய்கையார் அசதியில் ஒரு வீட்டின் திண்ணையில் ஓரமாகப் படுத்துக் கொண்டார். சற்று நேரத்தில் அங்கே பூதத்தார் வர, ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம் என்று கூறி, இருவரும் திண்ணையில் அமர்ந்து கொண்டு பகவானின் பெருமைகளைப் பேசினர். அடுத்து, மழையில் நனைந்தபடி அங்கே மூன்றாவதாக வந்து சேர்ந்தார் பேயாழ்வார். ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம் எனக் கூறி அவரையும் வரவேற்று, மூவரும் அந்தத் திண்ணையில் நின்றபடியே பகவானின் கல்யாண குணங்களைப் பேசினர். நேரம் சென்றது. அப்போது, தங்களுக்கு இடையே நான்காவதாக ஒரு நபர் நெருக்கியடித்து நிற்பதை அம்மூவரும் உணர்ந்தனர். அவ்வாறு வந்தது தாமே என திரிவிக்ரமஸ்வாமி காட்டியருளினார். அந்தக் கணமே மூவரும் பகவானின் குணங்களைப் பாடத் தொடங்கினர். ""திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன், செருக்கிளரும் பொன்னாழி கண்டேன், புரிசங்கம் கைக்கண்டேன், என் ஆழி வண்ணன் பால் இன்று' என, பேயாழ்வாரும் பாடி முடித்தார். இவ்விதம் தமிழ் மலர்ச்சிக்கு வித்திட்ட வாமனர் ஆலயம் இருக்கும் திருக்கோவிலூர் தலத்தில், இன்னொரு சிறப்பும் உண்டு. பொதுவாக சிவாலயங்களில் சுற்றுப் பிராகாரத்தில், விஷ்ணு துர்க்கை இருப்பதைக் காணலாம். ஆனால், பெருமாள் சந்நிதியான இங்கே, பெருமாளின் அருகிலேயே விஷ்ணு துர்க்கை அருள்பாலிக்கிறாள். இவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் நின்று தரிசனம் செய்யும் வாய்ப்பு இந்தத் தலத்தில் கிட்டுகிறது. இந்த அமைப்பை, திருமங்கையாழ்வாரும் ""விந்தம் மேவிய கற்புடை மடக்கன்னி காவல் பூண்டகடிபொழில்' என்று துர்க்கையையும் சேர்த்து, புகழ்ந்து பாடுகிறார். இந்த விஷ்ணு துர்க்கை அம்மைக்கு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் பூஜை செய்தால் நவக்கிரக தோஷம் விலகும் என்பதும், சகோதர சகோதரிகள் உறவு பலப்படும் என்பதும் காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை. இங்கே பெருமாள், நின்ற கோலத்தில் மிகப் பெரிய உருவினராய், விஸ்வரூபியாய் காட்சி தருகிறார். ""மகாபலிச் சக்கரவர்த்திக்கு காட்சி தந்ததுபோல் தனக்கும் விஸ்வரூப தரிசனம் வேண்டும் என்று மிருகண்டு முனிவர் தவம் செய்தார். அவருக்காக பெருமாள் காட்சி அளித்த கோலம் இங்கே' என்று தல புராணம் சொல்கிறது. பெருமாளின் கையில் சக்கரமும் சங்கும் இடம் மாறியுள்ளது. பொதுவாக வலக்கரத்தில் உள்ள சக்கரம் இங்கே இடக்கரத்திலும், இடக்கரத்தில் உள்ள சங்கு இங்கே வலக்கரத்திலுமாக மாறியுள்ளது. கோயில் சுற்றுப்பிராகாரத்தில் வேணுகோபாலன், லட்சுமிநாராயணன், வீர ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர், ராமர், ஆண்டாள், சுக்ராச்சாரியார் சந்நிதிகள் உள்ளன. இங்கே மூலவர் சந்நிதி பின்புறம் வாமனர் எழுந்தருளியுள்ளார். திருக்கோவிலூர், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, கபிஸ்தலம் ஆகிய பஞ்ச கிருஷ்ணாரண்ய தலங்களில் இது முதலாவது தலம். கோயில் நுழைவு வாயிலின் வலதுபக்கம் சாளக்கிராமத்தால் ஆன ஸ்ரீகிருஷ்ணர் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார். இவரை தரிசித்த பின்பே மூலவரை வணங்குதல் மரபு. பிரார்த்தனை: நல்ல பதவிகளை அடைய, பதவி உயர்வு வேண்டி, பதவி இழந்தவர்கள் மீண்டும் பதவி பெற என, இங்கே வந்து பிரார்த்தனை செய்தால் அவர்களது வேண்டுதல் நிறைவேறும். திருமண யோகம், குழந்தை பாக்கியமும் கிட்டும். இங்கு விஷ்ணு ரூபமாக இருக்கும் சக்கரத்தாழ்வாரை வணங்கினால் எதிரிகள் தொல்லை நீங்கும். இங்கே தாயாருக்கு மஞ்சள்பொடி திருமஞ்சனம், துர்க்கையம்மைக்கு குங்கும அபிஷேகம், பெருமாளுக்கு வஸ்திரம், துளசி மாலை சாத்துதல், நெய்விளக்கு ஏற்றுதல் என நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுகிறார்கள் பக்தர்கள். கோயில் காலை 6.30 முதல் 12 மணி வரையும் மாலை 4 முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.
|