வாஸ்து சாஸ்திரமும் சகுனமும் |
வாஸ்து சாஸ்திரத்தைப் பின்பற்றி வீடு கட்டினால் என்றென்றும் நன்மை பயக்கும் என்பதை உணரும் அதேநேரத்தில் மற்றொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதுதான் சகுனம் பார்த்தல்.
எந்தெந்த நேரத்தில் எவ்வகையில் சகுனம் பார்த்தல் வேண்டும் என்பதையும் வாஸ்து சாஸ்திரம் விரிவாக விளக்குகிறது.
கட்டடக்கலை நிபுணரை அழைக்கும்போது பார்க்க வேண்டிய சகுனம்
வீடு கட்டுவதற்கான பணிகளில் ஆயத்தமாகி அனைத்து திட்டங்களையும் வகுத்து கட்டடக்கலை வல்லுனரை சந்தித்து பேசுவோம். அதன்பின், அவரது விருப்பத்துக்கு இணங்க வீடு கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள மனையை அவருக்கு காண்பிப்போம்.
இந்த இடத்தில்தான் சகுனத்தைப் பார்ப்பதைத் தொடங்க வேண்டும். வீடு கட்டப்பட வேண்டிய மனையை காட்டுவதற்கு கட்டடக்கலை நிபுணரை வீட்டிலிருந்து அழைத்து வரும்போது, சுமங்கலியான இளம்பெண் எதிரே வரவேண்டும். அந்தப் பெண் பூவோடும், பொட்டோடும், கழுத்திலே மாங்கல்யத்தோடும் இருத்தல் வேண்டும்.
அவ்வாறான பெண் எதிரே தென்பட்டால், எவ்வித சங்கடங்களுமின்றி வீடு கட்டிமுடிக்கும் பணி விரைவில் நிறைவேறும். அத்துடன் அந்த வீட்டில் குடியிருக்கப்போகும் குடும்பமும் , அனைத்து செல்வங்களும் பெற்று மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்வர் என்று வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. |