|
கார்த்திகை மாதம் பவுர்ணமி அன்று உமாமகேஸ்வர விரதம் இருக்க வேண்டும். இந்த விரதத்தின்போது சிவ விஷ்ணு தேவி பூஜைக்கு மிகச்சிறந்த காலம் ஆகும். உமாமகேஸ்வர விரதம் மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.
எல்லா விரதங்களையும் போல வீட்டினைச் சுத்தம் செய்து மெழுகி கோலமிட்டு ஒரு குறிப்பிட்ட இடத்தில் பொன் அல்லது வெள்ளியால் செய்த சிவன் பார்வதி உருவங்களைப் பஞ்ச கவ்வியத்தினால் அபிஷேகம் செய்து புதுதுணி அணிவித்து திரு அமுது படைக்க வேண்டும். தீப தூபங்கள் காட்டி மனமுருக வணங்குதல் வேண்டும்.
அன்று ஒரு பொழுது மட்டுமே உண்ண வேண்டும். சிவ ஆலயம் சென்று மனதில் நினைத்ததை நிறைவேற்றி தரக்கோரி வணங்குதல் வேண்டும். மறுநாள் காலையில் கும்பத்தையும், பிம்பத்தையும் வணங்கி ஏழைகளுக்கு அவற்றைத் தானமாகக் கொடுக்க வேண்டும்.
அடியார்களுக்கு உணவு கொடுத்து பணிவிடை செய்ய வேண்டும். ஆண்டு தோறும் இந்நோன்பினைக் கடைப்பிடிப்பவர்களுக்கு இம்மையில் சகல செல்வங்களும் மறுமையில் முக்தியும் உண்டாகும். 15 கலசங்களில் 15 உமாமகேஸ்வரப் பிரதிமை வைத்து 15 வகை பண்டங்களைப் படைத்து 15 முடியுள்ள கயிறு தரிக்க வேண்டும்.
15 ஆண்டுகள் இவ்விரதம் இருந்தால் சகல போகங்களும் பெற்று முடிவில் மோட்சமும் பெறலாம்.
|