|
சித்தர் செய்த பணிகள்
சித்தர்கள் தம்மை உயர்த்திக் கொண்டதோடு நில்லாமல் உலக மக்களையும் உயர்த்துவதற்குப் பணிகள் பல செய்தனர். சித்தர்கள், மக்களின் மன இருளைப் போக்கி, ஞான ஒளி பரப்பச் சிந்தனைச் செல்வத்தை வாரி வழங்கினர். உடல் நோய்களைத் தீர்க்கும் மூலிகைகளைக் கண்டறிந்து மருந்து செய்யும் முறைகளைத் தெரிவித்து நூல்கள் பல இயற்றினர். கோள்களின் நிலை, கால மாறுபாடு, சுடர்களின் இயக்கம் ஆகியவற்றை விளக்கிச் சோதிட நூல்கள் எழுதினர். மக்கள் தம் உடலைப் பேணி, அதன்மூலம் உள்ெளாளி காணவேண்டும் என்னும் நோக்கத்தில் மருத்துவ நூல்களை எழுதினர். அதன்படி அமைந்ததே சித்த மருத்துவம். மனித ஆற்றலை ஒருமைப் படுத்தவும், செம்மையாக்கவும், வெளிப்படுத்தவும் மந்திரங்களையும், மாந்திரிகங்களையும் வெளியிட்டனர். தெய்வங்களுக்கு முறைப்படி பூசைகள் செய்யப் பூசை விதி பற்றிய பாடல்களைப் பாடித் தந்தனர். ஆத்ம சக்தி, யோகநிலை ஆகிய நிலைகளை விளக்கி இலக்கியம் படைத்தனர். அவை சித்தர் பாடல்கள் என்றே வழங்குகின்றன. |