| இடைக்காட்டுச் சித்தர் பாடல் |
|
இடைக்காட்டுச் சித்தர் பாடல்
இடைக்காட்டுச் சித்தர் சங்கப் புலவரான இடைக்காடரினும் வேறானவர். இவரது காலம் கி.பி. 15ம் நூற்றாண்டு என்று சொல்லப்படுகிறது. இவர்கொங்கணச் சித்தரின் சீடராவார். இவர் பிறந்த இடம் மதுரைக்குக் கிழக்கேஉள்ள இடைக்காடா அல்லது தொண்டை மண்டலத்தில் உள்ளஇடையன்மேடா என்பது ஆய்விற்குரியது.
ஒருசமயம் இவர் பொதிய மலைச்சாரலில் வழக்கம் போல் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது நவசித்தரில் ஒருவர் வந்து இவரிடம் பால்கேட்க, அவருக்குப் பால் முதலியன கொடுத்து உபசரிக்கவே அவரும் இவரதுஅன்பைக் கண்டு மகிழ்ந்து இவருக்கு ஞானத்தை உபதேசித்து விட்டுச்சென்றாராம். அதனால் ஏழை ஆடு மேய்க்கும் இடையன் மாபெரும்சித்தரானார்.
தமது சோதிட அறிவால் இன்னும் சிறிது காலத்தில் ஒரு கொடிய பஞ்சம் வரப்போகிறது என்பதை உணர்ந்தார். முன்னெச்சரிக்கையாகத் தமதுஆடுகளுக்கு எக்காலத்திலும் கிடைக்கக்கூடிய எருக்கிலை போன்றவற்றைத்தின்னக் கொடுத்துப் பழக்கினார். குறுவரகு என்னும் தானியத்தை மண்ணோடுசேர்த்துப் பிசைந்து சுவர்களை எழுப்பிக் குடிசை கட்டிக் கொண்டார்.எருக்கிலை தின்பதால் உடலில் அரிப்பெடுத்து ஆடுகள் சுவரில் உராயும்போது உதிரும் வரகு தானியங்களை ஆட்டுப்பாலில் காய்ச்சி உண்டு வரப்போகும் பஞ்சத்துக்குத் தம்மைத் தயார்படுத்திக் கொண்டார்.
வற்கடம் வந்தது. பஞ்சத்தால் உணவும் நீருமின்றி உயிர்கள் மாண்டன.நாடே ஜன சந்தடியில்லாமல் வெறிச்சோடிக் காட்சியளித்தது. ஆனால்,இடைக்காடர் மட்டும் என்றும் போல் தம் ஆடுகளுடன் வாழ்ந்திருந்தார்.
நாட்டில் பஞ்சத்தால் உயிர்களெல்லாம் அழிந்து போக இடைக்காடரும் அவரது ஆடுகளும் மட்டும் பிழைத்திருப்பதைக் கண்ட நவக்கிரகங்கள் ஆச்சரியமுடன் அந்த இரகசியத்தை அறிந்துகொள்ள இவரிடம் வந்தன.
இடைக்காடருக்கோ ஆனந்தம். நவநாயகர்களும் என்குடிசையை நாடி வந்துள்ளீர்களே! உங்களை உபசரிக்க எம்மிடம் ஒன்றுமில்லை. ஆயினும் இந்த ஏழையின் குடிசையில் கிடைக்கும் வரகு ரொட்டியையும், ஆட்டுப்பாலையும் சாப்பிட்டுச் சிரம பரிகாரம் செய்து கொள்ளுங்கள் என்று உபசரித்தார்.
பஞ்ச காலத்திலும் பசிக்கு உணவு தரும் இடைக்காடரைக் கண்டு மகிழ்ந்த நவ கோள்களும் அந்த விருந்தினைப் புசித்தனர். எருக்கிலைச்சத்து ஆட்டுப்பால் அவர்களுக்கு மயக்கத்தை வரவழைக்கவே அவர்கள் மயக்கத்தால் உறங்கி விட்டனர்.
இந்த சமயத்தில் நவகோள்கள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டு உலகத்தைப் பஞ்சத்தால் வருத்தும் கிரகங்களை இடைக்காடர் அவைகள் எந்த அமைப்பில் இருந்தால் மழை பொழியுமோ அதற்குத் தக்கவாறு மாற்றிப் படுக்க வைத்து விட்டார்.
வானம் இருண்டது, மேகம் திரண்டது, மழை பொழிந்தது. வறட்சி நீங்கியது. கண் விழித்துப் பார்த்த நவகோள்களும் திடுக்கிட்டனர். நொடிப்பொழுதில் இடைக்காடர் செய்த அற்புதம் அவர்களுக்கு விளங்கிவிட்டது.நாட்டின் பஞ்சத்தை நீக்கிய சித்தரின் அறிவுத்திறனை மெச்சி அவருக்கு வேண்டிய வரங்களைக் கொடுத்து விடைபெற்றனர்.
இந்த இடைக்காடரின் புகழ் பூவுலகம் மட்டுமன்றி வானுலகமும் எட்டியது. ஒரு சமயம் விஷ்ணுவை வழிபடுகிறவர்களுக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. விஷ்ணுவின் தசாவதாரங்களில் மிகவும் வணங்கத்தக்கவை எவை என்று எழவே சித்தரிடம் கேட்டனர்.
இடைக்காடரோ ஏழை இடையன் இளிச்சவாயன் என்று கூறிவிட்டுச் சென்று விட்டார். தங்களுக்குப் பதில் சொல்லச் சங்கடப்பட்டு தன்னைத்தாழ்த்திக் கொண்டு சென்றுவிட்டாரோ என்று அவரது தன்னடகத்தை எண்ணிய அவர்கள் பின்னர் அவர் கூறியதை மறுபடியும் எண்ணிய போது அவர்கள் கேட்ட கேள்விக்கான விடையும் புலப்பட்டது.
ஏழை - சக்கரவர்த்தித் திருமகனாகப் பிறந்தும் ஏழையாகவே வாழ்ந்த இராமன் அவதாரம்.
இடையன் - கிருஷ்ணாவதாரம்
இளிச்சவாயன் - நரசிம்மர்
தேவர்கள் இடைக்காடரின் தன்னடக்கத்தையும் நுண்ணறிவையும் புகழ்ந்தவாறு தம்முலகு சென்றனர். |