| கோயிலில் உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் என்ன செய்ய வேண்டும்? |
| கோயிலில் உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் என்ன செய்ய வேண்டும்?
ஜோதிடத்தில், சகுன ஜோதிடம் என்று தனி உட்பிரிவு உள்ளது. பஞ்ச பட்சி சாஸ்திரம், சகுன ஜோதிடம் ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர்கள் கடந்த காலங்களில் வாழ்ந்தனர். இதில் சகுன ஜோதிடத்தில் தேங்காய் வருகிறது.
சகுன ஜோதிடத்திற்கு பல உதாரணங்கள் கூறலாம். மாடு வைத்துள்ளவர்கள் தங்கள் மாட்டின் கண்ணில் நீர் வடிந்தால், அந்தக் குடும்பத்தின் தலைவருக்கு கடுமையான உடல் உபாதை அல்லது பெரும் நஷ்டம், பொருள் இழப்பு ஏற்படும். புதிய முதலீடுகளை அவர் தவிர்க்க வேண்டும்.
சகுன ஜோதிடத்தைப் பொறுத்தவரை தேங்காய் என்பது ஒரு மனிதனாகவே கருதப்படுகிறது. தெங்கு+காய்=தேங்காய். நம்மை நாமே இறைவனுக்கு அர்ப்பணிப்பதன் அர்த்தமாகவே கோயிலில் தேங்காய் உடைக்கிறோம்.
இந்தத் தேங்காய் உடையும் விதத்தில் சகுன ஜோதிடம் பல விடயங்களை உணர்த்துகிறது. தேங்காயின் ஓடு மட்டும் தனியாக வந்தால், சம்பந்தப்பட்டவருக்கு உடனடியாக பொருள் நஷ்டம் உண்டு என்று அர்த்தம்.
ஒருவேளை தேங்காய் அழுகியிருந்தால், சம்பந்தப்பட்டவருக்கு கடுமையான உடல்நலக் குறைவு, நோய் ஏற்படும். குறிப்பாக தேங்காய் அழுகியுள்ள சதவீதத்திற்கு ஏற்ப அவரது உடலில் பாதிப்பு ஏற்படும் என சகுன ஜோதிடம் கூறுகிறது.
இதேபோல் அழுகியுள்ள பகுதியின் சதவீதத்திற்கு ஏற்ப பாதிப்பு ஏற்படும் நாள் தொலைவில் உள்ளதா? அருகில் உள்ளதா? என்பதையும் தெரிந்து கொள்ளலாம். தேங்காய் அழுகினால் ஒரு சிலருக்கு உடனடி மரணம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் நிகழும் போது சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்வது நல்லது. அதுமட்டுமின்றி உடல் நலத்திலும், உணவுக் கட்டுப்பாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். பயணங்களை தவிர்க்கலாம். தவிர்க்க முடியாத நிலையில் மிகவும் பாதுகாப்பான வழியில் பயணம் செய்யலாம்.
உதாரணமாக நீண்ட தூர பயணத்திற்கு இரு, நான்கு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவதை விட, அரசுப் பேருந்து அல்லது ரயிலில் பயணம் மேற்கொள்ளலாம். உறவினர்கள் மோதல், பங்காளிப் பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. |