அனுமன் பெற்ற அற்புத வரங்கள் |
ஸ்ரீராமபிரானின் பட்டா-பிஷேகக் கொண்டாட்ட வைபவங்கள் முடிந்த பின், ஆசுவாசமாக ஸ்ரீராமபிரான்- ராவணாதியரின் பலம், தபம், வரம் முதலியவை பற்றிய சந்தே-கங்களை அகத்திய மாமுனிவர் விளக்குவதாக, ஸ்ரீவால்மீகி ராமாயணத்தின் உத்தரகாண்டம் அமைந்திருக்கிறது.
ஸ்ரீராமர், ஒரு நியாயமான கேள்வியை எழுப்புகிறார்: “வாலி மிகுந்த பலசாலிதான். ராவண-னையே தோற்-கடித்து அவனைத் தனது கையில் இடுக்கிக்கொண்டு பல சமுத்திரங்-களுக்கும் சென்று தனது நித்ய கர்மானுஷ்டானங்களைச் செய்து, ராவணனுக்குச் சொல்ல முடியாத துன்பத்தை அளித்தான். இருப்பினும் ஆஞ்சநேயன் - வாலி, ராவணன் இவர்களையும்விட மிகப் பலம் வாய்ந்தவர். அப்படியிருந்தும் வாலி, சுக்ரீவனைத் துன்புறுத்தி கிஷ்கிந்-தையை விட்டுத் துரத்தியபோது ஆஞ்சநேயர் ஏன் சுக்ரீவனுக்கு உதவவில்லை?” என்று அகத்தியரிடம் கேட்கிறார்.
அப்போதுதான் ஸ்ரீராமருக்கு, ஆஞ்சநேயரின் வரலாற்றைக் கூறுகிறார் அகத்தியர்.
“அஞ்சனாதேவிக்கு ஆஞ்சநேயர் பிறந்தபோதே, மிகுந்த பலசாலியான குழந்தையாக விளங்கினார். அஞ்சனாதேவி, குழந்தைக்கு ஆகாரம் கொண்டு வரச் சென்றிருந்தபோது, மிகவும் பசியுடன் இருந்த குழந்தை ஆஞ்சநேயன், சூரியனை ஒரு பழம் என்று நினைத்து அதைப் பறித்து உண்ண விரும்பி சூரியனை நோக்கி வானில் பாய்ந்தார். ஆனால் சூரியன், ஸ்ரீராமபிரானுக்கு இந்த ஆஞ்சநேயன் உதவி செய்ய வேண்டுமென்பதை உணர்ந்து, குழந்தைக்குத் தீங்கு எதுவும் செய்யவில்லை. ஆனால், அன்றைக்குச் சூரிய கிரகணம். ராகு, சூரியனை விழுங்குவதாக ஏற்பாடு. தனக்குப் போட்டியாக சூரியனை நெருங்கும் ஆஞ்சநேயனைப் பார்த்து வெகுண்ட ராகு, இந்திரனிடம் சென்று முறையிட்டார் (ஏனெனில், சூரியனைப் பிடிக்க விரும்பிய அனுமன், ராகுவையும் பிடிக்க முயன்றார்).
இந்திரன், ராகுவையும் அழைத்துக்கொண்டு மிகுந்த கோபத்துடன் அனுமனை அணுக, அவர் ஐராவதத்தையும் ஒரு பெரிய பழமென்று நினைத்து அதை நோக்கிப் பாய்ந்தார். இதனால் இன்னும் கோபமுற்ற இந்திரன், குழந்தை என்றும் பார்க்காமல், அனுமனைத் தனது வஜ்ராயுதத்தால் அடித்தார். அடியுண்ட அனுமன் இடது தாடை உடைபட்டு விழுந்தார். இறந்தது போலவே கிடந்தார்.
தனது மகன் இந்திரனால் தாக்கப்பட்டு உயிரிழந்ததுபோல் கிடந்ததைக் கண்டு வருந்திய வாயு பகவான், அந்தக் குழந்தையைத் தனது மடியில் கிடத்தியவாறு தனது இயக்கத்தை நிறுத்திவிட்டார். வாயுவின் இயக்கம் இல்லாததால், அனைத்து ஜீவராசிகளும் மிகவும் துன்பப்பட்டனர். இதற்கு தேவர்களும் கந்தர்வர்களும்கூட விதிவிலக்-கல்ல. எனவே, அனைவரும் பிரம்மாவிடம் சென்று முறையிட... அவர் அனைவரையும் அழைத்துக்கொண்டு வாயு பகவானிடம் வந்தார்.
இறந்துகிடந்த குழந்தையைக் கண்டு, பரிதாபமும் இரக்கமும் கொண்ட பிரம்மா தனது கரத்தால் அதைத் தடவிக் கொடுக்கவும், அனுமன் மீண்டு எழுந்தார். பிரம்மா அனைத்து தேவர்களையும் நோக்கி, ‘இந்தக் குழந்தையால்தான், ராவணன் முதலிய அரக்கர்களால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தைத் தீர்க்க முடியும். அதனால் இவனுக்கு வேண்டிய அளவு நல்ல வரமளியுங்கள். அதன்மூலம் வாயு பகவானும் திருப்தி அடைவார்’ என்று சொன்னார்.
இதன்பின்னர் சூரியன், தனது ஒளியில் 100-ல் ஒரு பங்கை ஆஞ்சநேயருக்கு அருளினார். மேலும், தானே அனுமனுக்கு வேதங்கள், சாஸ்திரங்கள் அனைத்தையும் போதித்து, கல்வியில் சிறந்தவனாகச் செய்வதாக ஒப்புக்கொண்டார்.
வருணன் - காற்றாலோ, நீராலோ அவருக்கு மரணம் ஏற்படாது என்றார். யமதர்மன், யம தண்டத்திலிருந்தும் நோய்களினின்றும் அனுமன் பாதிக்கப்பட மாட்டார் என வரமருளினார். குபேரன், அனுமன் யுத்தத்தில் சோர்வே அடைய மாட்டார் என்றார். சிவபெருமான், தனது அஸ்திரங்களினாலோ, தனது கரங்களினாலோ மரணம் ஏற்படாது என்றார்.
விஸ்வகர்மா, தன்னால் இதுவரை செய்யப்-பட்ட ஆயுதங்களாலோ, இனிமேல் தான் செய்யும் ஆயுதங்களாலோ ஆஞ்சநேயர் பாதிக்கப்பட மாட்டார் என்றார். பிரம்மதேவர், ஆஞ்சநேயர் சிரஞ்சீவியாக இருப்பார் என்றும், பிராமணர்களால் சாபம் அளிக்கப்பட மாட்டார் என்றும் அருளினார். மேலும், அனுமன் தான் விரும்பிய வடிவம் எடுக்கவும், ஒருவரிடமும் பயமோ, யுத்தத்தில் தோல்வியோ அடைய மாட்டார். நினைத்த இடத்துக்கு நினைத்த வேகத்தில் அவரால் செல்ல முடியும் என்றும் வரமளித்தார். இந்த வரங்களினால் திருப்தியுற்ற வாயு பகவான் தனது இயக்கத்தைத் தொடங்கினார்.
தனக்களிக்கப்பட்ட வரங்களால் பெருமை கொண்ட அனுமன், காட்டில் தவம், யாகம் செய்துவந்த முனிவர்களுக்கு விளையாட்டாக மிகவும் தொல்லை கொடுக்கவே, அவர்கள் அனுமனுக்குத் தனது பலம் தெரியாமல் இருக்க வும், யாராவது அதைப் பற்றி நினைவுறுத்தினால் மட்டுமே அதை அவர் உணர முடியும் என்று சொல்லி, அவர் தனது உண்மையான பலத்தைப் பற்றி அறியாதவாறு செய்துவிட்ட-படியால்தான், ஆஞ்சநேயரால் தனது பலத்தை உணர்ந்து சுக்ரீவனுக்கு உதவ முடியாமல் போனது” என்று ஸ்ரீராமபிரானுக்கு விளக்குகிறார் அகத்தியர்.
சுந்தர காண்டத்தில்கூட, ஆஞ்சநேயருக்கு ஜாம்பவான், அவரது பலத்தையும் பராக்கிரமத்-தையும் எடுத்துக் கூறி நினைவூட்டியதால்தானே, அவரால் செயற்கரிய செயல்களைச் செய்ய முடிந்தது.
புத்திர்-பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம்
அரோகதா
அஜாட்யம் வாக்-படுத்வம் ச ஹநூமத்
ஸ்மரணாத் பவேத்
‘புத்தி, பலம், புகழ், தைரியம், பயமின்மை, நோயின்மை, சோம்பலின்மை, தெளிந்த வாக்கு ஆகியவை, அனுமனை நினைப்பதால் சித்திக்கும்.’ |