|
விரதத்தை உபவாசம் என்று அழைப்பார்கள். விரதம் இருப்பதால் தெய்வீகத் தன்மை பெறலாம். "இறைவனின் அருகில் செல்கிறோம் என்பதே விரதம் என்பதன் பொருளாகும். விரதத்தை மூன்று வகையாகச் சொல்லலாம்.
* துளிநீர் கூட அருந்தாமல் பட்டினி இருப்பது;
* நீர் மட்டும் அருந்தி விரதம் இருப்பது;
* பால், பழம், வேக வைத்த பொருள் சாப்பிட்டு விரதம் இருப்பது.
முதலாவது வகை மிகமிக உத்தமமானது. இது, அதிக உழைப்பில்லாமல் தொழில் செய்பவர்களுக்குப் பொருந்தும். கடுமையாக உழைப்பவர்களுக்கு இவ்வித உபவாசம் சற்று கடினமாகத் தெரியும். இரண்டு, மூன்றாவது வகை உபவாசத்தை மத்தியமாக எடுத்துக்கொள்ளலாம்.
தொடர்ந்து பகலில் மட்டும் உண்டு விரதம் இருக்கக்கூடிய வகையும் உண்டு. ஆனால் சாந்த்ராயண விரதங்கள் சற்று வேறுபட்டவை. ஐயப்ப மலைக்குச் செல்பவர்கள் இருக்கும் விரதங்கள் புலால் உண்ணாமை, பகலில் தூங்காமல் இருத்தல், எந்நேரமும் இறைநாமம் சொல்லுதல் இப்படி வெவ்வேறு வகையில் விரத வழிமுறைகள் உண்டு.
விரதம் இருக்கும் நாட்களில் இரண்டு வேளை குளிப்பது, துவைத்து தனியாக உள்ள துணிகளை அணிவது, தேவையற்ற வார்த்தைகளைப் பேசாமல் இருப்பது , விருந்து,கேளிக்கைகளைத் தவிர்த்தல், கோபத்தை விலக்குதல் இப்படி பல நெறிகளைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டியுள்ளது.
நாம் எந்த தெய்வத்திற்கு விரதம் இருக்கிறோமோ அந்த தெய்வத்தின் படம் முன்பு ஆவாஹனம் செய்து பூஜிப்பது என்று சில வழிகள் உண்டு. அவ்வாறு பூஜிக்கும்போது பூர்வாங்க பூஜை, ப்ரதான பூஜை, உத்தராங்க பூஜை, புனர் பூஜை என்று வழிமுறைகள் உண்டு. அந்தந்த தெய்வத்திற்குரிய விசேஷ துதிகளைச் சொல்வதும் மிகவும் நன்மை தரும்.
எந்த தெய்வத்தைப் பூஜிக்கிறோமோ அந்தத் தெய்வத்திற்கு உரிய விசேஷ மலர்களாலும்,நைவேத்தியங்களாலும் பூஜை செய்வது அதிக நன்மை தரும். சிலவற்றைத் தவிர்க்கவும் வேண்டும். உதாரணமாக விநாயகருக்குத் துளசியைத் தவிர்க்க வேண்டும். அம்பாள், விஷ்ணு போன்றவர்களுக்கு அட்சதையால் அர்ச்சிப்பதைத் தவிர்க்க வேண்டும் .
சிவபெருமானுக்கு தாழம்பூவைத் தவிர்க்க வேண்டும். மகாலட்சுமிக்கு தும்பைப் பூவைத் தவிர்க்கலாம். விசேஷமான பூக்கள் என்று எடுத்துக்கொண்டால் பொதுவாக எல்லா தெய்வங்களுக்கும் வாசனையுள்ள பூக்களால் அர்ச்சிப்பதும், வாசனையற்ற பூக்களைத் தவிர்ப்பதும் நல்லது.
மேலும், தரையில் விழுந்த பூ, அழுகிய பூ, மற்றவர்கள் தலையில் சூடிய பூ, மயானத்தின் அருகே மலர்ந்த பூ, செயற்கையான பூக்கள் ஆகியவற்றைத் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
* பிள்ளையாருக்கு எருக்கம்பூ விசேஷமானதாகும்.
* துளசி மகாவிஷ்ணுவுக்கு மிகவும் ப்ரியமானதாகும்.
* தாமரைப்பூ மகாலட்சுமிக்கு ப்ரியமானதாகும்.
* வில்வ தளங்கள் சிவபெருமானுக்கு விசேஷமானதாகும்.
இதேபோன்று நைவேத்தியம் என்று வரும்பொழுது விநாயகருக்கு கொழுக்கட்டை, துர்க்கைக்குத் தேன், அனுமனுக்கு வடைமாலை, விஷ்ணுவுக்கு சர்க்கரைப் பொங்கல், அம்பாளுக்கு சித்ரான்னங்கள், கோபாலகிருஷ்ணருக்கு பால் பாயசம் படைக்க வேண்டும்.
ஆனால் முடிந்தவரை நம் சக்திக்கு ஏற்றபடி தான் விரதத்தையும், பூஜையையும், நைவேத்தியம் செய்வதையும் கடைப்பிடிக்க வேண்டும்.
|