|
அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில்
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, மூலம் நட்சத்திர நாளிலோ சென்று வழிபட வேண்டிய தலம் திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில்.
தல வரலாறு: திருவாலங்காட்டில் இறைவன் ஆனந்த தாண்டவ நர்த்தனம் ஆடியபோது சிங்கி என்ற நந்தி மிருதங்கம் இசைப்பதில் ஆழ்ந்திருந்ததால் அந்த நடனத்தை ரசிக்கத் தவறியது. மீண்டும் அந்த ஆனந்த நர்த்தனத்தைக் காண மெய்ப்பேடு தலத்தில் லிங்கத்தை பூஜித்ததால் சிங்கியின் பக்திக்கு இணங்கி சிவபெருமான் இங்கு மீண்டும் நடனம் புரிந்தார். இதனால் இறைவன் பெயர் சிங்கி+ஈஸ்வரர்= சிங்கீஸ்வரர் என அழைக்கப்படுகிறது. அம்பாள் நறுமணம் மிக்க மலருக்கு உரியவராக இருப்பதால் இவளுக்கு புஷ்பகுஜாம்பாள் என்றும், பூமுலைநாயகி என்றும் அழைக்கப்படுகிறாள்.
மூல நட்சத்திர தலம்: ஆஞ்சநேயர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர். கலைமகள் மூலநட்சத்திர தினத்தில் தான், ஆஞ்சநேயரது நாவில் வெண்தாமரை தண்டினால், சிங்க நாத பீஜாட்சர சக்திகளை பொறித்ததார். ஆஞ்சநேயரும் முதன் முதலில் மூல நட்சத்திரத்தன்று இத்தல இறைவனை சிங்க நாத இசை கொண்டு வழிபட்டு சிவனருள் பெற்றார். இதனால் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது பிறந்த நட்சத்திரத்தன்று இத்தலத்தில் இசைக்கலைஞர்களை கூட்டி பிரார்த்தனை செய்தால் ஆய கலைகள் 64லிலும் தேர்ச்சி பெறுவார்கள் என்பது ஐதீகம்.
வீணை வாசிக்கும் ஆஞ்சநேயர்: இந்த சன்னதியின் முன் ஆங்சநேயர் வீணையில் அமிர்தவர்ஷினி ராகத்தை இசைத்து பாடினார். இசைத் துறையில் பிரகாசிக்க விரும்புவோர் இங்கு வந்து பயிற்சிகள் மேற்கொண்டு இறைவனை வழிபட்டால் இசைத்துறையில் பிரபலம் அடைவார்கள்.
தல சிறப்பு: கோவிலின் வட கிழக்கு மூலையில் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஸ்ரீவீரபாலீஸ்வரர் சன்னதி உள்ளது. கொடி மரத்தின் அருகில் உள்ள நந்தியையும், மூலவரையும் பிரதோஷ காலத்தில் ஒரே நேரத்தில் அதன் எதிரில் கீழே உள்ள நவவியாகரன கல்லின் மீது ஏறி நின்று தரிசனம் செய்தால் எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமான நோய்கள் குணமாகும். இங்குள்ள துர்க்கை மிகவும் விசேஷமானவள்.42 வாரம் இவளுக்கு தீபமேற்றி வழிபட்டால் வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம்.
சோழர் கால கோயில்: வீரபாண்டியன் தலை கொண்டவன் என்ற பெயர் கொண்ட சோழ மன்னனான இரண்டாம் ஆதித்திய கரிகாலனால் கி.பி.976ல் கோவில் கட்டப்பட்டது. இவன் தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழனின் தகப்பனார். பின்னர் இதே கிராமத்தில் பிறந்த அரியநாத முதலியார் கிருஷ்ண தேவராயர் மதுரையை ஆண்ட காலத்தில் தளவாயாக இருந்ததால் அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி கி.பி.1501ல் கோவில் ராஜ கோபுரம், மதில் சுவர் மற்றும் 16 கால் மண்டபத்தை கட்டி வைத்தார்.
கோயில் அமைப்பு: பிரகாரத்தில் ஆஸ்தான விநாயகர்,வள்ளி,தெய்வானையுடன் முருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள்,வீரபாலீஸ்வரர்,வீணை ஆஞ்சநேயர், கால பைரவர், சூரிய பகவான்,சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.
இருப்பிடம்: சென்னை கோயம்பேட்டில் இருந்து (45 கி.மீ) தக்கோலம் செல்லும் வழியில் மப்பேடு உள்ளது.
திறக்கும் நேரம்: காலை 6 10 மணி, மாலை 5.30 இரவு 7.30 மணி.
போன்: 94447 70579,94432 25093
|