|
அருள்மிகு அட்சய புரீஸ்வரர் திருக்கோயில்
சனீஸ்வரனின் நட்சத்திரமான பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது ஆயுள்காலத்தில் அடிக்கடியோ, அல்லது பூசநட்சத்திரத்தன்றோ, அட்சய திரிதியை தினத்திலோ வழிபட வேண்டிய திருத்தலம் தஞ்சாவூர் மாவட்டம் விளங்குளம் அட்சய புரீஸ்வரர் திருக்கோயில் ஆகும். இத்தலத்தில் சனீஸ்வர பகவான் தெற்கு நோக்கி மந்தா, ஜேஷ்டா மனைவியருடன் திருமண கோலத்தில் ஆதி பிருஹத் சனீஸ்வரர் என்ற பெயரில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
தல வரலாறு : பூச பத நேசம் தரும் என்பது பழமொழி. பதன் என்பது சனீஸ்வரரை குறிக்கும். ஒருமுறை எமன், சனீஸ்வரன் காலில் அடிக்க, கால் ஊனமானது. இதற்கு நிவாரணம் தேடி பல சிவத்தலங்கள் சென்றார். அப்போது அவர் இத்தலத்தில் உள்ள விளாமர வேரில் கால் இடறி அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்தார். உடனே திருதியையும், பூச நட்சத்திரமும், சனிவாரமும் சேர்ந்த நன்னாளில் பல காலமாக மறைந்திருந்த பூச ஞானவாவி தீர்த்தம் சுரந்து சனீஸ்வரரை மேல் எழுப்பி கரை சேர்த்தது. அப்போது சிவபெருமான் அட்சய புரீஸ்வரராக சனீஸ்வரருக்கு காட்சி தந்து, திருமண பாக்கியமும் தந்தார். இதனால்சனீஸ்வரரின் கால் ஊனம் நிவர்த்தி ஆனது. இத்தலம் விளம்குளம் ஆனது.
பூச நட்சத்திர லோகத்தை சேர்ந்த பூச மருங்கர் என்ற சித்தர், சனீஸ்வர லோகத்திலிருக்கும் சனிவாரித்தீர்த்தத்தை எடுத்து, பூமியில் பல கோயில்களில் உள்ளசனி தீர்த்தங்களில் அதை சேர்ப்பதுடன், பல கோயில் சனி பகவானின் திருவடிகளை வழிபடுபவர். அத்துடன் ஆதித்ய பித்ரு லோகங்களுக்கு தினமும் சென்று வரும், அரிய சக்தியை உடைய பித்ரசாய் காக்கைகளுக்கு சற்குருவாக விளங்குகிறார். இவர் தினமும் அரூபமாக இத்தலத்தில் வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது. எனவே இத்தலம் பூச நட்சத்திரத்திற்குரிய கோயிலாக திகழ்கிறது.
பூச நட்சத்திர வழிபாடு: பூச நட்சத்திரத்திற்குரியவர்கள் பூசநட்சத்திர தினம், அட்சய திரிதியை நாளில் நல்லெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், புனுகு,இளநீர், சந்தனம், பால், தயிர் ஆகிய எட்டு வகை பொருள்களால் சனி பகவானுக்கு அபிஷேகம் செய்து, எட்டு முறை சுற்றி வந்து வழிபட்டால் தீராத பிரச்னைகள் தீரும் என்பதும், அனைத்து வகையான சனி தோஷத்தினால் பாதிக்கப்ட்டவர்கள் இத்தலத்தில் மனைவியருடன் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கும் சனிபகவனை வழிபட்டால் தோஷங்களின் பாதிப்பு குறையும் என்பதும் ஐதீகம்.
அடிக்கடி உடல் நலக்குறைவு, கடன் பிரச்னையால் அவதிப்படுபவர்கள், மன நிம்மதி வேண்டுபவர்கள்,உடல் ஊனமுள்ளவர்கள், கால் வலி உள்ளவர்கள், தோஷங்களினால் திருமணத்தில் தடை உள்ளவர்கள் விளங்குளம் சனீஸ்வரரை வழிபடுவது சிறப்பு.இத்தல அபிவிருத்தி நாயகியை வழிபட்டால் சகல காரியங்களும் அபிவிருத்தியாகும்.
திருவிழா : மகா சிவராத்தரி, திருக்கார்த்திகை, திருவாதிரை
திறக்கும் நேரம் : மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
இருப்பிடம் : பட்டுக்கோட்டையிலிருந்து (30 கி.மீ) ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில்(ஈசிஆர்) விளங்குளம் öபோஸ்ட் உள்ளது. அங்கிருந்து தெற்கே 2 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. புதுக்கோட்டையிலிருந்து வருபவர்கள், ஆலங்குடி- பேராவூரணியிலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ள விளங்குளம் போஸ்ட் வந்து, அங்கிருந்து 2 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. போன் : 97507 84944, 96266 85051
|